மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்தது இந்திய அரசு!

பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின், இந்திய அரசாங்கம் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்குமான ஒரு புதிய சார்ஜர் கொள்கையை (New Charger Policy) கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதென்ன கொள்கை? எதற்காக இந்த கொள்கை? இதனால் என்ன நன்மை? என்ன தீமை? விரிவாகப் பார்க்கலாம்.
விரைவில் இந்தியாவும்!

ஐரோப்பிய ஒன்றியத்தை போலவே, கூடிய விரைவில் இந்தியாவும் காமன் சார்ஜர் பாலிசிக்கு (Common charger policy), அதாவது பொதுவான சார்ஜர் கொள்கைக்கு மாற உள்ளது! ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் என கிட்டத்தட்ட அனைத்து சாதனங்களிலும் ஒரே சார்ஜிங் போர்ட்டை (Same Charging Port) பயன்படுத்த வேண்டும் என்பதே ‘காமன் சார்ஜர் பாலிசி’ ஆகும்.

நன்மை

அனைத்து கேஜெட்களிலும் ஒரே சார்ஜிங் போர்ட்-ஐ பயன்படுத்தும் இந்த உலகளாவிய சார்ஜர் கொள்கையின் மூலம், நுகர்வோர்கள் ஒவ்வொரு முறையும் புதிய எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கும் போது வெவ்வேறு சார்ஜர்களை வாங்க வேண்டிய / பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது! அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையால் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளின் அளவும் குறையும்!

இந்திய அரசாங்கம் கொண்டு வரும் இந்த புதிய சார்ஜர் கொள்கையின் கீழ், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட ஸ்மார்ட் டிவைஸ்களுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும் மிகவும் மலிவான விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும் ஃபீச்சர் போன்களில் இந்த புதிய சார்ஜர் கொள்கை கொண்டுவரப்பட வேண்டுமா என்பதை பற்றி இந்தியா அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை! அதே சமயம் வெவ்வேறு மின்பயன்பாடு இருக்கும் சாதனங்களுக்கு எப்படி ஒரே சார்ஜரை பயன்படுத்த முடியும் என்பதையும் அரசு தெளிவாக்கவில்லை.

என்ன செய்ய வேண்டும்?

காமன் சார்ஜர் (Common Charger) என்பது டைப்-சி போர்ட் சார்ஜரே (Type-C Port Charger) ஆகும். அதாவது ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, டேப்லெட் ஆக இருந்தாலும் சரி, லேப்டாப் ஆக இருந்தாலும் சரி.. அது டைப்-சி போர்ட்டை கொண்டிருக்கும் ஒரு டிவைஸ் ஆக மாற போகிறது என்று அர்த்தம்! முன்னரே குறிப்பிட்டபடி, இந்த புதிய சார்ஜர் கொள்கையின் பின்னால் உள்ள முக்கிய குறிக்கோள் – இந்தியா உருவாக்கும் மின்-கழிவுகளின் அளவைக் குறைப்பதே ஆகும்! மொத்தத்தில் இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது பழைய போன்களுக்கான சார்ஜர்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்! இல்லையேல் தனியாக பணம் கொடுத்தே புதிய சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கும்!

ஆப்பிளின் கவலை

இந்தியாவின் எலக்ட்ரானிக் வேஸ்ட் மேனேஜ்மென்ட்டின் ASSOCHAM-EY அறிக்கையின்படி, நம் நாடு ஆண்டுக்கு 5 மில்லியன் டன் மின்-கழிவுகளை உருவாக்குகிறது. அதாவது சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்படியாக, காமன் சார்ஜர் கொள்கை ஆனது மொத்த நாட்டிற்கும் ஒரு நல்ல நடவடிக்கையாக இருந்தாலும் கூட, ஆப்பிள் நிறுவனத்திற்கு இதுவொரு பெரிய தலைவலியாக இருக்க போகிறது. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களில் லைட்னிங் கேபிளையே பயன்படுத்துகிறது. இனிமேல் அப்படி செய்ய முடியாது; மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போலவே ஆப்பிளும் கட்டாயம் அதன் சாதனங்களை தயாரிக்கும் போது டைப் சி போர்ட்டோடு தயாரிக்க வேண்டும்.